×

தரை-வான்-கடல் வழியாக முழு தாக்குதலுக்கு தயார் நிலையில் இஸ்ரேல் படைகள்: காசா எல்லைகளில் அணிவகுத்து நிற்கும் பீரங்கிகள், எந்நேரமும் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் பதற்றம்

டெல் அவிவ்: காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக் கட்ட தரை, வான், கடல் வழியாக முழு அளவிலான தாக்குதலுக்கு இஸ்ரேலின் முப்படைகளும் தயார் நிலையில் உள்ளது. தரை வழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவ பீரங்கிகள் எல்லைக்கு மிக நெருக்கமாக முன்னேறி உள்ளன. எந்நேரமும் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால், காசாவில் உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது. பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பு, கடந்த 7ம் தேதி இஸ்ரேலில் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, ஹமாசை அழிக்க காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்துள்ளது.

இதுவரை வான்வழி தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல் ராணுவம், முதல் முறையாக தரை வழி தாக்குதலுக்கு ஆயத்தமாகி உள்ள நிலையில் 9வது நாளாக இப்போர் நேற்றும் தொடர்ந்தது. காசாவின் வடக்கு பகுதியில் உள்ள பாலஸ்தீன மக்கள் தெற்கு நோக்கி இடம்பெயர இஸ்ரேல் ராணுவம் கடந்த வெள்ளிக்கிழமை 24 மணி நேர கெடு விதித்தது. இதற்காக பாதுகாப்பான பாதைகளையும் அறிவித்தது. அந்த வழியாக ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் கார்களிலும், லாரிகளிலும், கழுதை வண்டிகளிலும் பயணித்து வருகின்றனர். நேற்று முன்தினமே இந்த கெடு முடிந்தாலும், இஸ்ரேல் ராணுவம் அடுத்தடுத்து அவகாசத்தை நீட்டித்து வருகிறது.

நேற்று காலையிலும் கூடுதலாக 3 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டது. அதிகப்படியான மக்கள் தெற்கு நோக்கி செல்ல விரும்புவதாக இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது. வடக்கு பகுதியில் தரை வழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டுள்ளது. அங்கு பொதுமக்களை மனித கேடயமாக ஹமாஸ் படையினர் பயன்படுத்த வாய்ப்புள்ளதால், முதலில் பொதுமக்களை வெளியேற உத்தரவிட்டுள்ளது. ஆனால் எப்போது தரை வழிதாக்குதல் நடத்தப்படும் என்பதை இஸ்ரேல் ராணுவம் உறுதியாக தெரிவிக்கவில்லை. தற்போதைய நிலையில் அதன் பீரங்கிகள் படைகள் அனைத்தும் காசா எல்லைக்கு மிக நெருக்கமாக நகர்த்தப்பட்டுள்ளன.

தரை, வான்வழி, கடல் மார்க்கம் என மும்முனையிலும் முழு அளவில் தாக்குதல் நடத்த இஸ்ரேலின் முப்படைகளும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. எந்த நேரமும் இஸ்ரேல் தனது தாக்குதலை தொடங்கும் என்பதால் காசாவில் உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது. தரை வழி தாக்குதல் நடத்தும் பட்சத்தில் அதன் விளைவுகள் சர்வதேச அளவில் எதிரொலிக்கும் என்பதால் அரசியல் முடிவையும் இஸ்ரேல் ராணுவம் எதிர்பார்த்து காத்திருக்கிறது. உள்நாட்டு தலைவர்களுடனும், அமெரிக்கா உள்ளிட்ட உலக வல்லரசுகளுடனும் இஸ்ரேல் பேச்சுவார்த்தை நடத்தி முடித்த பிறகே தரைவழி தாக்குதல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம், தெற்கு நோக்கி மக்களை செல்ல விடாமல் சாலையில் தடுப்புகள் அமைத்து ஹமாஸ் படை தடுத்து வருவதாகவும் இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டி உள்ளது. இதற்கிடையே, அமெரிக்காவின் மற்றொரு போர் கப்பல் இஸ்ரேலுக்கு ஆதரவாக மத்திய தரைக்கடல் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம், தோகாவில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா, ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹூசைன் அமிரதுல்லாஹினை சந்தித்து பேசி உள்ளார்.

இப்போரை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தாவிட்டால் பேரழிவை சந்திக்க வேண்டியிருக்கும் என ஈரான் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. மேலும், அண்டை நாடான லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லா படையினர் நேற்றும் இஸ்ரேல் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால், லெபனான் எல்லையை இஸ்ரேல் மூடியுள்ளது. காசாவை தொடர்ந்து லெபனான் எல்லை அடுத்த போர்க்களாக மாறி வருகிறது.

*126 பணயக் கைதிகள்
ஹமாஸ் படையினர் இஸ்ரேலில் இருந்து வெளிநாட்டவர்கள் உட்பட 126 பேரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றிருப்பதாக இஸ்ரேல் ராணுவம் நேற்று உறுதிபடுத்தி உள்ளது.

*காசாவிற்கு உதவி; ஜோ பைடன் உறுதி
இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் முக்கிய கட்டத்தில் உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸ் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நெதன்யாகுவிடம் அவர், இஸ்ரேலுக்கு அமெரிக்கா முழு ஆதரவு தருவதாகவும், இப்போரை மத்திய கிழக்கில் விரிவுபடுத்த யார் முயன்றாலும் அவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுக்கும் என்றும் உறுதி அளித்தார்.

பின்னர் பாலஸ்தீன அதிபர் அப்பாசிடம் பேசிய அதிபர் பைடன், இஸ்ரேல் மீதான ஹமாசின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார். காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்காக ஹமாஸ் எந்த நன்மையும் செய்யாது என கூறினார். போரால் காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டுமென அப்பாஸ் கேட்டுக் கொண்டார். இதைத்தொடர்ந்து, நட்பு நாடுகளுடன் இணைந்து காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கச் செய்யவும், இப்போர் மேலும் விரிவடையாமல் நடவடிக்கை எடுப்பதாகவும் பைடன் உறுதி அளித்துள்ளார்.

* இதுவரை 5 போரில் அதிகபட்ச பலி பதிவு
இதுவரை காசாவிற்காக பாலஸ்தீனத்துடன் இஸ்ரேல் 5 முறை போர் செய்துள்ளது. இதில் அதிகபட்ச உயிர் பலியை தற்போதைய போர் பதிவு செய்துள்ளது. இதற்கு முன், 2014ல் நடந்த போரே அதிக உயிர்களை காவு வாங்கியதாக இருந்தது. அப்போது 2,251 பாலஸ்தீனர்கள் பலியானார்கள். அவர்களில் 1,462 பேர் பொதுமக்கள். 6 வாரங்கள் நடந்த இப்போரில் இஸ்ரேல் தரப்பில் 6 பொதுமக்கள் உட்பட 74 பேர் பலியாகினர்.

தற்போது 9 நாள் போரில் இந்த பலி எண்ணிக்கை மிஞ்சப்பட்டுள்ளது. இதில் 2,329 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தரப்பில் 1,300 பேர் பலியாகி உள்ளனர். இதில் பெரும்பாலானோர் பொதுமக்கள். எகிப்து, சிரியாவுக்கு எதிராக 1973ம் ஆண்டில் இஸ்ரேல் நடத்திய போரிலிருந்து, தற்போது நடந்து வரும் போர் தான் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

* மருத்துவமனைகளில் பல உயிர்கள் கேள்விக்குறி
காசா எல்லைகள் அனைத்தும் முடக்கப்பட்டதால், உணவு, குடிநீர், மின்சாரம், எரிபொருள் இன்றி பொதுமக்களின் வாழ்க்கை நரகமாகி உள்ளது. ஏற்கனவே 2,329 பேர் பலியான நிலையில், இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதல் நடத்தினால் மேலும் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி மருத்துவமனைகளில் மருந்துகள் தீர்ந்து வருகின்றன. எரிபொருள் திங்கட்கிழமை வரை வரும் அளவுக்கு மட்டுமே உள்ளன.

இதனால் எரிபொருள் தீர்ந்தால் ஜெனரேட்டர்கள் செயலிழந்து ஐசியுவில் உள்ள நோயாளிகள் உயிர் கேள்விக்குறியாகும். குண்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் பெரும்பாலானவர்கள் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள். மருந்துகள் பற்றாக்குறையால் அவர்களின் நிலையும் கேள்விக்குறியாகி உள்ளது. 50,000 கர்ப்பிணிகள், பிறந்த குழந்தைகள் நிலைமையும் மிக மோசமாக இருப்பதாக சுகாதார பணியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

* ‘பாலஸ்தீன பின்லேடன்’ இஸ்ரேலின் முக்கிய குறி
இஸ்ரேலில் கடந்த 7ம் தேதி நடத்திய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வர். இவரை ‘பாலஸ்தீனத்தின் பின்லேடன்’ என இஸ்ரேல் ராணுவம் கூறி வருகிறது. தீமையின் முகம் என சின்வரை கூறி வரும் இஸ்ரேல் ராணுவம், காசாவில் புகுந்து சின்வரை கொல்வதே தங்களின் முக்கிய நோக்கம் என கூறி உள்ளது.

* மற்றொரு தளபதி பலி
இஸ்ரேலில் நிரிம் கிப்புட்ஸ் பகுதியில் 40 குழந்தைகள் உட்பட பலரை கழுத்தறுத்து ஹமாஸ் படையினர் படுகொலை செய்தனர். அந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட ஹமாஸின் நுக்பா படைப்பிரிவை வழிநடத்திய உயர்மட்ட தளபதியான பிலால் அல் கேத்ரா கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது. காசாவின் தெற்கில் உள்ள கான் யூனிஸ் நகரில் பிலால் பதுங்கியுள்ள கட்டிடம் குறித்து உளவுத்துறை அளித்த தகவலின் படி நேற்று முன்தினம் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் பிலால் கொல்லப்பட்டுள்ளார். இதை ஹமாஸ் உறுதிபடுத்தவில்லை. ஏற்கனவே 3 ஹமாஸ் படைத் தளபதிகள் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

* 906 இந்தியர்கள் 3 நாளில் திரும்பினர்
‘ஆபரேஷன் அஜய்’ திட்டத்தின் கீழ், இஸ்ரேலில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்டு மேலும் 2 விமானங்கள் நேற்று டெல்லி வந்தடைந்தன. இதில் ஒரு விமானத்தில் 197 பேரும், மற்றொரு விமானத்தில் 274 பேரும் அழைத்து வரப்பட்டதாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறி உள்ளார். கடந்த 3 நாளில் இத்திட்டத்தின் கீழ் 4 விமானங்களில் 906 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். வெள்ளி, சனிக்கிழமை 435 இந்தியர்களும், நேற்று ஒரே நாளில் 471 இந்தியர்களும் மீட்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post தரை-வான்-கடல் வழியாக முழு தாக்குதலுக்கு தயார் நிலையில் இஸ்ரேல் படைகள்: காசா எல்லைகளில் அணிவகுத்து நிற்கும் பீரங்கிகள், எந்நேரமும் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : Gaza ,Tel Aviv ,Israel ,Hamas ,Dinakaran ,
× RELATED ஒளிபரப்பு தடை செய்யப்பட்ட நிலையில்...